Events

Thursday, October 6, 2011

பதட்டம் குறைக்க பயிற்சிகள் 2



எளிய மூச்சு பயிற்சி:
களைப்பை போக்கி கவனத்தை தரும் சிறந்த எளிய பயிற்சியாக இதனைப் பலரும் கருதுகிறாற்கள். இந்த பயிற்சியை உட்கார்ந்து கொண்டும் அல்லது நின்று கொண்டும் செய்யலாம்.
முதலில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். ஏராளமான காற்று உடலினுள் இருக்குமாறு வைத்துக் கொண்டு மெதுவாக காற்றை வெளியேற்றுங்கள். காற்றை வெளியிடும் போது உங்கள் மனதிற்குள்ளே ஒன்று, இரண்டு, மூன்று என பத்து வரை அமைதியாக எண்ணிக்கொள்ளுங்கள்.

காற்று முழுவதும் வெளியே சென்றபின் மீண்டும் காற்றை உள்ளே இழுத்து கொள்ளுங்கள் . மீண்டும் ஒன்று முதல் பத்து வரை அமைதியாக மனதிற்குள் எண்ணிக்கொண்டே காற்றை வெளியேற்றுங்கள். பின்பு இந்தப் பயிற்சி ஐந்து அல்லது ஆறு முறை செய்து வாருங்கள். தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற வீணான பயத்தை நீக்க இந்தப் பயிற்சி உதவும். இந்த பயிற்சியை எந்த இடத்திலும், யாருக்கு தெரியாமலும் செய்யலாம் என்பதால் பலர் இதனை விரும்பிச் செய்கிறார்கள்.
படிப்பில் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் களைப்பைப் போக்க தியானம், இறைவழிபாடு, ஆள்நிலை மூச்சுப் பயிற்சி, தசைகளை தளவு செய்யும் பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளும் உதவியாய் அமையும். இதுபோன்றே பல்வேறு உங்களுக்குப் பிடித்தமான வீட்டுத்தோட்டம் அமைத்தல், சமையல் செய்தல், இசை கேட்டல், செல்லப் பிராணிகளுடன் விளையாடுதல் போன்ற பொழுதுபோக்கு செயல்பாடுகளும் படிப்பதனால் ஏற்படும் களைப்பை போக்க உதவும்.

ஒய்வில்லாமல் தொடர்ந்து படிப்பதன் மூலம் மனதில் வீணான எண்ணங்கள் உருவாகும். அந்த எண்ணங்கள் , எதிர்மறை எண்ணங்களாக உருவாகவும் வாய்ப்புள்ளது. இதனால் தேர்வுக்கான தயாரிப்பு பணி மிகவும் பாதிக்கப்பட்டு விடும். உண்மையான ஓய்வு என்பது தனியாக செய்யவேண்டிய ஒன்றாகும். நான் ஓய்வெடுக்கப் போகிறேன்'' என யாரிடமும் சொல்லாமல் ஓய்வெடுப்பதே சிறந்தது.
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 30 வருடங்களுக்கு முன்பு நான் படித்து கொண்டிருந்த போது ஒரு பயிற்சி தந்தார்கள். படிக்கும் மாணவர்களின் களைப்பைப் போக்கவும் , படிப்பில் அதிக கவனத்தை உருவாக்கவும் இந்தப் பயிற்சி உதவும் என்றார்கள். அந்தப் பயிற்சியில் சேர 10 ரூபாய் கட்டணம் என்றும் சொன்னார்கள். பள்ளி விடுதியில் தங்கிப் படித்த பல மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்திருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருந்தேன்.

விடுதியில் படிப்பு நேரத்தில் தினமும் காலை 61/2 மணிக்கு தொடங்கி 71/2 மணி வரை அதிக பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் முதல் நாள் சுமார் 75 மாணவர்கள் மாடியிலுள்ள பெரிய அறையில் சேர்ந்து அமர்ந்திருந்தோம். பயிற்சியளித்த ஆசிரியரை ``மிகச்சிறந்த பயிற்சியாளர்'' என அறிமுகம் செய்தார்கள். பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
பின்னர் எங்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து எங்கள் காதில் ஒரு மந்திரத்தைச் சொன்னார் . நான் சொல்லப் போவதை நீங்கள் கவனமாக கேட்டு செயல்பட வேண்டும். உங்கள் கையில் ஒரு கைக்குட்டை தந்திருக்கின்றோம். அதனை எடுத்து நீங்கள் தரையில் விரித்து அதன் மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதன் பின்பு கண்களை மெதுவாக மூடுங்கள். இனி நான் உங்கள் ஒவ்வொருவரின் காதில் சொன்ன மந்திரத்தை நீங்கள் கவனமாக மனதிற்குள்ளே சொல்லி வாருங்கள் இந்த மந்திரம் மிகவும் முக்கியமானது. இந்த மந்திரத்தை வெளியே சொன்னால் அதன் சக்தி குறைந்துவிடும். கவனம் சிதறி விடும். படிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் . எனவே நீங்கள் கூர்ந்து கவனியுங்கள்'' என்று மந்திரத்தின் முக்கியத்துவத்தை பயிற்சியாளர் விளக்கிக் கொண்டிருந்தார்.
கண்ணை மூடிக்கொண்டு பயிற்சியாளர் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த எங்களுக்கு அது வித்தியாசமாக இருந்தது.

கண்ணை மூடியிருக்கும் நீங்கள் நான் சொன்ன மந்திரத்தை மனதிற்குள் ஒன்றிலிருந்து 100 வரை எண்ணிக் கொண்டே சொல்லுங்கள் நீங்கள் மந்திரத்தை சொல்லும் போது தேவையில்லாத எண்ணங்கள் உங்கள் மனதிற்குள் வரும் . அதைபற்றி நீங்கள் கவலைபடபதீர்கள் தொடர்ந்து அந்த மந்திரத்தை சொல்லுங்கள் '' என்று கூறினார்.
கண்களை மூடிக்கொண்டு பயிற்சியாளர் கூறியவற்றை அப்படியே ஏற்று மந்திரத்தை நாங்கள் மனதிற்குள் சொல்ல ஆரம்பித்தோம். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு பயிற்சியாளர் எல்லோரும் மந்திரம் சொல்லி முடித்துவிட்டீர்களா?'' என்று கேட்டார்.
நாங்கள் அனைவரும் அந்த மந்திரத்தை 100 தடவை மனதிற்குள் சொல்லி முடித்துவிட்டோம் என்பதைத் தெரிந்துக் கொண்ட பிறகு எங்களை மெதுவாக கண்களைத் திறக்க சொன்னார் பயிற்சியாளர். கண்களைத் திறந்த பின் மாணவர்களில் ஒருசிலர் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
``தம்பிகளே மந்திரம் மிக வலிமையானது . இந்த மந்திர சொல்லை நீங்கள் யாரிடமும் சொல்லக் கூடாது '' என்று சொல்லி வைத்திருந்தால் யாரும் இந்த மந்திரத்தை வெளியே பிறரிடம் சொல்லவில்லை.

இந்தப் பயிற்சியை இரண்டு மூன்று தடவை செய்யச் சொன்னார் பயிற்சியாளர். தினமும் காலையில் இந்த அறைக்கு வந்து விட வேண்டும் '' என்றார்.
மூன்று நாட்கள் பயிற்சி முடிந்தது. பயிற்சி நிறைவு நாளில் கலந்துக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தோம். மாடிப்படிவழியாக கீழே ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தோம்.
எனக்கு முன்னால் சென்ற மாணவர் மாடிபடியில் குதித்துக் கொண்டு இறங்கும்போதே ``ஐய்ங்க்ஞ்.ஐய்ங்க்;ஞ்.ஐய்ங்க்;ஞ். '' என மெதுவாக சத்தம் எழுப்பிக் கொண்டு கீழே இறங்கினார்''.
அதை பார்த்து அருகில் இருந்த இன்னொரு மாணவர் ஏலே உனக்கு ஐய்ங்க்'' என்று தான் மந்திரமாக சொன்னாரா ? எனக்கும் ஐய்ங்க்'' தான் மந்திரம் என்றான். இந்த இருவர் பேச்சை கேட்ட மற்றொரு மாணவன் எனக்கும் ஐய்ங்க் தான் மந்திரமாக சொன்னார் என்றான். மாடிபடியிலிருந்து கீழே இறங்குவதற்குள் ஒவ்வொருவரும் ஐய்ங்க்... ஐய்ங்க்... '' என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

பிறரை தூண்டிவிடுவதில் சிறந்து விளங்கிய இன்னொரு மாணவன் ரிலாக்ஸ் பண்ணவும் நினைவாற்றலை வளர்க்கவும் உதவும் பயிற்சி என்று சொல்லி 10 ரூபாய் வாங்கிவிட்டார்கள். என்ன மந்திரம் சொன்னார்கள்? ஜய்ங்க் என்று சொல்லுவதற்கு 10 ரூபாய் கட்டணமா ? இதை நாம் சும்மா விடகூடாது ? இது நமக்கு சொல்லத் தெரியாத மந்திரமா ?'' என உணர்ச்சிபூர்வமாக பேசினான். அவனுடன் ஒரு சிலர் கூட்டணி சேர்ந்து கொண்டார்கள் மொத்தத்தில் அந்த பயிற்சி மீது நம்பிக்கை இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டார்கள் அந்த மாணவர்கள்.

இளமைப் பருவத்தில் நண்பர்கள் சொல்லுகின்ற அத்தனை கருத்துக்களை உண்மை என்று ஏற்கொள்ளுகின்ற மனப்பக்குவம் எல்லாமாணவர்களுக்கும் உண்டு என்பதால் நானும் விதிவிலக்கல்ல. பயிற்சியின் முக்கியத்துவத்தை அறியாமல் பயிற்சியாளரையும் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்தவர்களையும் குறை சொல்லிய கூட்டத்தில் என்னை அறியாமல் நானும் கலந்து கொண்டேன். இதனால் மாணவப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடத்தப்பட்ட பயிற்சியின் முக்கியத்துவத்தை உணராமல் அன்று பயிற்சியை முறைப்படி செய்யாமல் விட்டு விட்டேன். இந்த நினைவுகள் இன்றும் என் மனத்திரையில் வந்து அடிக்கடி போகும்.
களைப்பைபோக்குவதற்காகவும், படிப்பில் அதிககவனத்தைஉருவாக்குவதற்காகவும் பல எளிய பயிற்சிகளை குறிப்பிட்டு இருக்கின்றேன் . இந்த பயிற்சிகள் அனைத்தும் 5 நிமிடத்திற்குள் செய்து முடிக்க கூடிய பயிற்சிகளாகும். அதனால் இது எளிய பயிற்சிதானே இதில் என்ன புதுமை இருக்கின்றது'' என்று இந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கிவிடாதீர்கள்.
படிப்பில் அக்கரைக் கொண்ட மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக எந்த பயிற்சி கொடுத்தாலும் அதனை ஏற்று கொள்வார்கள். சென்னையில் சில இடங்களில் நினைவாற்றலை வளர்ப்பதற்காக 3 நாள் பயிற்சி கட்டணமாக 15,000 ரூபாய் நிர்ணயித்து இருக்கின்றார்கள். என்பதை மாணவ, மாணவிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?'' என்று பல இடங்களில் ஆயிரக்கணக்கில் கட்டணங்கள் வசூலித்துக் கொண்டு பயிற்சிகளை நடத்தும் நிறுவனங்களில் கொடுக்கப்படும் பயிற்சிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றேன். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது உறுதியாகும்.

இந்தப் பயிற்சிகள் தேர்வுக்கு மட்டுமல்லாமல் பதட்டம் நீக்கி வாழ்வில் நல்ல முடிவை எடுப்பதற்கும் நிச்சயம் உதவியாய் அமையும்.

No comments:

Post a Comment